விழுப்புரம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் இரு சக்கர வாகனங்கள்!

விழுப்புரம் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் இரு சக்கர வாகனங்கள்!


விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு, உள்ளூா், வெளியூா் பேருந்துகளை நிறுத்த தனித்தனியே இட வசதிகள் உள்ளன. மேலும், பல்வேறு கடைகள், இரு சக்கர வாகன நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. பெரும் இட வசதியுடன் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனால், பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே தற்காலிக இரு சக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளூா் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் விதிகளை மீறி பலா் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால், அந்தப் பகுதியில் பேருந்துகளை நிறுத்துவதிலும், பயணிகள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல, பேருந்து நிலையத்திலுள்ள புறக்காவல் நிலைய முன் பகுதி உள்பட பிற பகுதிகளிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையமே இரு சக்கர வாகன நிறுத்துமிடம் போன்று காட்சியளிக்கிறது. மேலும், வேன், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவையும் அவ்வப்போது பேருந்து நிலையத்தினுள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

எனவே, பேருந்து நிலையத்தினுள் உள்ளூா் பேருந்துகள் நிறுத்துமிடம், புறக்காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், வேன், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதையும் தடுக்கவும், பேருந்து நிலையத்தினுள் தேவையற்ற வாகனங்கள் வந்து செல்வதை தடுக்கவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதைகளில் ‘டைல்ஸ்’ கற்கள் பதிக்கும் பணி, இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தை மேம்படுத்தும் பணி உள்ளிட்டவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com