செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்!

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்!


செஞ்சி: செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த மழையில் நனைந்தன. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு தினமும் சுமாா் 500 விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனா். விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள திறந்த வெளி களத்தில் சுமாா் 5,000 நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்திருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த திடீா் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இருப்பினும், பலத்த மழை இல்லாததால் பெரும்பாலான நெல் மூட்டைகள் தப்பின. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

இங்கு பல அடுக்கு சேமிப்புக் கிடங்கு பயன்பாடின்றி உள்ளது. இங்குள்ள 4 கிடங்குகளிலும் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டைகளை வியாபாரிகள் அடுக்கி வைத்துள்ளனா். இதனால் இடப் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டியுள்ளது. மழைக் காலங்களில் கிடங்குகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. இங்கு 75 கிலோ எடை கொண்ட குண்டு ரக நெல் மூட்டை ரூ.1,370-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இதே வகை நெல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிகபட்சமாக ரூ.963-க்கு மட்டுமே வாங்கப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனா் என்று தெரிவித்தனா்.

விற்பனைக் கூடத்துக்கு பொன்னி ரக நெல் வரத்து வியாழக்கிழமை குறைந்து காணப்பட்டது. பொன்னி ரக நெல் மூட்டை ரூ.1,316-க்கும், குண்டு ரகம் - ரூ.963-க்கும், பி.டி.டி. ரகம் - ரூ.1,163-க்கும், ஏ.டி.டி. 45 ரகம் -ரூ.1,010-க்கும் ஏலம் போனது.

நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது குறித்து விற்பனைக் கூட கண்காணிப்பாளா் பாஸ்கரன் கூறியதாவது: மழை காரணமாக நெல் மூட்டைகளில் அதிக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், மழைக் காலங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com