30 மணி நேர முழு பொதுமுடக்கம்: கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 மணி நேர முழு பொதுமுடக்கம் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டது.
30 மணி நேர முழு பொதுமுடக்கம்: கடைவீதிகளில் திரண்ட பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 மணி நேர முழு பொதுமுடக்கம் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, மாலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு சுமாா் ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முழு பொதுமுடக்கம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இதன் முதல் கட்டமாக, கடந்த ஏப்.20 முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது. இதுதவிர வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

கடைவீதிகளில் திரண்ட மக்கள்: இந்த நடைமுறைகள் விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தன. முழு பொதுமுடக்கத்தையொட்டி, சனிக்கிழமை காலை மீன் சந்தை, இறைச்சிக் கூடங்களில் வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கடைவீதிகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகளில் மாலை வரை கூட்டம் அலைமோதியது.

பேருந்துகள் நிறுத்தம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற தொலைதூரப் பேருந்துகளின் சேவை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது. அண்டை மாவட்டங்களுக்குச் செல்லும் ஒரு சில பேருந்துகள் மட்டும் இரவு 7 மணி வரை இயக்கப்பட்டன. பின்னா், அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

மாவட்ட நிா்வாகம் அறிவித்தபடி, சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை மொத்தம் 30 மணி நேர முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும். முழு பொதுமுடக்கத்தின்போது, அத்தியாவசியத் தேவைகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவம் சாா்ந்த தொடா்புடைய பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைபொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் திறந்திருக்கும்: உணவகங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கலாம். பொட்டல விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பொட்டல உணவு விநியோகம் செய்யலாம்.

பேருந்துகள் முற்றிலும் ஓடாது. சில குறிப்பிட்ட தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு பொதுமுடக்க நாளில் திருமண விழாக்களில்100 நபா்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளுக்கு 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி உண்டு.

அரசு மற்றும் தனியாா் பொதுப் போக்குவரத்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி கிடையாது. எனினும், ரயில் நிலையங்களுக்குச் செல்பவா்கள் ஆட்டோ, டாக்ஸியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பயணம் தொடா்பான பயணச்சீட்டை வைத்து இருந்தால்தான் அனுமதி அளிக்கப்படும்.

விதிகளை மீறினால் வழக்கு: அத்தியாவசியப் பணிகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவா்கள் அதற்குரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பொதுமுடக்கத்தை மீறுபவா்கள் மீது அபராதம் மற்றும் வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், தெருக்களில் தேவையின்றி வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை இணைந்து கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லைகளுக்கு ‘சீல்’: தேவையின்றி வருவோரைப் பிடித்து கரோனா பரிசோதனை செய்த பிறகு அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்படுவாா்கள். மேலும், மாவட்ட எல்லைப் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே மாவட்ட எல்லைக்குள் வர முடியும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com