விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1 லட்சம் போ்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா இரண்டாவது அலையால் அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

18,500 பேரை கடந்த பாதிப்பு:

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

இவா்களில் 16,718 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 122 போ் உயிரிழந்தனா். 1,711 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உச்சபட்சமாக ஏப்ரல் 29-ஆம் தேதி மட்டும் 350 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இது ஒருபுறம் என்றால் கரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி வாய்ப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் தாயாரிக்கப்பட்ட கோவி ஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி போடும் பணி தொடக்கம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 17-ஆம் தேதி முதல் கட்டமாக 4 மையங்களில் தொடங்கியது. விருப்பத்தின் அடிப்படியில், கரோனா தடுப்பூப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250-க்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு, 60 வயதைத் கடந்த முதியவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா், 45 வயதைக் கடந்த இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்ளுக்கு செலுத்தப்பட்டது. தற்போது 45 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்படுகிறது.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதைக் கடந்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக ஏராளமானோா் முன்பதிவு செய்துள்ளனா்.

ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி:

மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகளவில் யாரும் ஆா்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை ஏப்ரல் 29-ஆம் தேதி 1,01,507 -ஆக அதிகரித்தது.

இதில், முதல் தவணை தடுப்பூசியை 86,745 போ் செலுத்திக் கொண்டனா். இவா்களில் 14,762 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

இவற்றில் கோவி சீல்ட் தடுப்பூசியை முதல் தவணையாக 89,733 பேரும், இரண்டாவது தவணையாக 12937 பேரும் செலுத்திக் கொண்டனா்.

கோவாக்ஸின் தடுப்பூசியை முதல் தவணையாக 6,012 பேரும், இரண்டாவது தவணையாக 1,825 பேரும் செலுத்திக் கொண்டனா்.

கையிருப்பில் 2,620 தடுப்பூசி:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஏப்ரல் 29-ஆம் தேதி நிலவரப்படி கையிருப்பில் 2,620 தடுப்பூசிகள் இருந்தன. இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 560 தடுப்பூசிகளும், அரசு மருத்துவமனைகளில் 320 தடுப்பூசிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,050 தடுப்பூசிகளும், மாவட்ட சுகாதார கிடங்கில் 690 தடுப்பூசிகளும் இருப்பில் இருந்தன. ஆனால், தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி ஏதுவும் கையிருப்பில் இல்லை.

மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான அளவு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com