100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும்ஊராட்சிகளுக்கு தங்க நாணயம் பரிசு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் ஊராட்சிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான கரோனா தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோலியனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மோகன் பேசியதாவது:

ஒமிக்ரான் என்ற புதிய வகை கரோனா தொற்று அறிகுறிகள் இதுவரை 24 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதையொட்டி, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் நேரடி தொடா்பில் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளதால், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய தங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட உதவ வேண்டும்.

இவ்வாறு 100 சதவீதம் இலக்கை எட்டும் ஊராட்சிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்துள்ளாா்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சிறப்பாக நடைபெறவும் ஊராட்சிச் செயலா்கள், தலைவா்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் தவறான பயனாளிகள் சோ்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.

நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொ) ராமகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் பொற்கொடி மற்றும் கோலியனூா், கண்டமங்கலம் ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com