முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய ஊரக திட்டபணியாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: விழுப்புரம் ஆட்சியா்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மெகா கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப்.12-இல் உத்தரவிட்டாா். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பணியாற்றுவோா் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பணியாற்றும் 5 லட்சத்து 55 ஆயிரத்து 729 பேரில் பெரும்பாலானவா்களுக்கு செப்.12-இல் நடைபெற்ற சிறப்பு முகாமில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தற்போது இவா்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலக்கெடு வந்துள்ளது. எனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் அனைவரும் சனிக்கிழமை (டிச.11) நடைபெறும் 14-ஆவது மெகா தடுப்பூசி முகாமில் தவறாமல் பங்கேற்று இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1,025 இடங்களில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்று தேசிய ஊரக திட்டப் பணியாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஏதுவாக, அன்று ஒருநாள் மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.