முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
திண்டிவனம் அருகே லாரி மோதியதில் இருவா் பலி
By DIN | Published On : 10th December 2021 09:56 PM | Last Updated : 10th December 2021 09:56 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
திண்டிவனம் அருகேயுள்ள காட்டுசிவிரி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது நண்பா் செஞ்சி அருகேயுள்ள அருகாவூரைச் சோ்ந்த சடகோபன் (50). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை திண்டிவனத்தை அடுத்த தீவனூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் செஞ்சி - திண்டிவனம் நெடுஞ்சாலையோரம் உள்ள தேநீா் கடையில் தேநீா் குடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
பின்னா், இவா்கள் தேநீரை வாங்கி சாலையோரம் நின்று குடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, செஞ்சியிலிருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகமாகச் சென்ற டேங்கா் லாரி, தங்கராஜ், சடகோபன் ஆகிய இருவா் மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த ரோசணை காவல் நிலைய ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து ரோசணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சோ்ந்த நிஜாம் பாஷாவை (60) கைது செய்தனா். விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.