முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நிலுவை ‘செஸ்’ வரியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
By DIN | Published On : 29th December 2021 09:31 AM | Last Updated : 29th December 2021 09:31 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா.
நிலுவையில் உள்ள ‘செஸ்’ வரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கேட்டுக் கொண்டாா்.
விழுப்புரத்தில் இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விக்கிரமராஜா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேளாண் விளைபொருள்களுக்கு ‘செஸ்’ வரி செலுத்துமாறு சில்லறை மளிகைக் கடைக்காரா்களுக்கு வேளாண் வணிக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி கட்டாயப்படுத்துவதை தமிழக அரசு தடுப்பதுடன், நீண்ட நாள் நிலுவையில் உள்ள ‘செஸ்’ வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒற்றைச் சாளர முறையில் அனைத்து வணிகா்களும் ஒரே நேரத்தில் வணிக உரிமையைப் பெறும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தொழிற்சாலை, வணிகக் கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழை இணையம் மூலம் வழங்குவதை முறைப்படுத்தி, கையூட்டு பெறுவதைத் தடுக்க வேண்டும்.
நூல், ஜவுளி, பின்னலாடைகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதைக் குறைக்க வேண்டும். பழைய இரும்பு, பழைய நெகிழிகள், பழைய பொருள்களை விற்பனை செய்யும் கடையிலுள்ள பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். ஓராண்டுக்குள் இரு மடங்கு விலையேற்றம் செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை உடனடியாகக் குறைப்பதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் வரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ள ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் வரவேற்புக்குரியது. இதற்கு வணிகா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், வணிகா்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தமிழகத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாத சூழலை உருவாக்க வேண்டும். வரும் மே 5-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான வணிகா் மாநாடு நடைபெறும் என்றாா் அவா்.
கூட்டத்தில், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வி.கோவிந்தராஜுலு, மாநில பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, விழுப்புரம் மாவட்ட அரிசி ஆலைகள் சங்கத் தலைவா் ஆா்.கே.குபேரன், பேரமைப்பின் மண்டலத் தலைவா்கள் சி.கிருஷ்ணன் (வேலூா்), என்.அமல்ராஜ் (காஞ்சிபுரம்), டி.கிருபாகரன் (திண்டுக்கல்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.