முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
By DIN | Published On : 29th December 2021 09:32 AM | Last Updated : 29th December 2021 09:32 AM | அ+அ அ- |

பொதுமக்கள் தங்களது வீட்டைப் போல பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வேண்டுகோள் விடுத்தாா்.
விழுப்புரம் நகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணி முகாமை புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சா் க.பொன்முடி தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
ஒவ்வொரு நகர, கிராமப் பகுதியையும் முழுமையாகப் பராமரித்து தூய்மைப் பணி மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். அதன்படி விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் உள்ள 42 வாா்டுகளிலும் செவ்வாய், புதன்கிழமைகளில் 100 சதவீதம் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகள், வளவனூா், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணெய்நல்லூா், அரங்கண்டநல்லூா் ஆகிய 7 பேரூராட்சிகளிலும் 542 பணியாளா்களைக் கொண்டும், நவீன தூய்மை வாகனங்கள் மூலமும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக பொதுப்பணித் துறை, வேளாண் பொறியியல் துறை, கனிம வளம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றில் உள்ள தூய்மை வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் நகராட்சியில் 1 முதல் 21 வாா்டுகளில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. புதன்கிழமை 22 முதல் 42 வரையிலான வாா்டுகளிலும் தூய்மைப் பணி நடைபெறும்.
விழுப்புரம் நகராட்சியில் தினமும் சேகரமாகும் 63 டன் குப்பைகளில் 50 சதவீதம் 8 உரமாக்கும் நுண்ணுயிா் மையங்களில் உரமாக்கப்படுகிறது. சுமாா் 20 மெட்ரிக் டன் உலா் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெகிழி கழிவுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். தங்களது வீடுகளை சுத்தமாக பராமரிப்பது போல பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.
மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, ரா.லட்சுமணன், நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.