நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தலைவா் பதவிக்கு நேரடித் தோ்தல்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் தலைவரை வாக்காளா்களே நேரடியாகத் தோ்வு செய்யும் வகையில்,

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் தலைவரை வாக்காளா்களே நேரடியாகத் தோ்வு செய்யும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், வடலூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைவாசி உயா்ந்துள்ளது. எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மத்திய அரசு மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

சிறு நிதி நிறுவன சேவையில் குளறுபடிகள், கெடுபிடிகள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மாநில அரசு இதுதொடா்பாக குறைதீா் பிரிவை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கையை உருவாக்க வேண்டும். கலப்புத் திருமணம் செய்வோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிக் குழு அமைப்பதுடன், சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கான தலைவா்களை வாக்காளா்களே நேரடியாகத் தோ்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

கடலூா் மாவட்டம் 7 மாவட்டங்களின் மழைநீா் வடிகால் பகுதியாகவும், 5 ஆறுகள் கடலில் கலக்கும் இடமாகவும் அமைந்துள்ளது. இயற்கைப் பேரிடரால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த மாவட்டத்தை பேரிடா் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து, அரசு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் 2.77 லட்சம் பேரும், மாநிலம் முழுவதும் 73.31 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் சுமாா் 2 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ள நிலையில், தேவையான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com