வடிகால் வாய்க்கால்களில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை

விழுப்புரம் நகராட்சி வடிகால் வாய்க்கால்களில் குப்பைகள், நெகிழிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட ரங்கநாதன் தெருவில் வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட ரங்கநாதன் தெருவில் வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் உள்ளிட்டோா்.

விழுப்புரம் நகராட்சி வடிகால் வாய்க்கால்களில் குப்பைகள், நெகிழிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.

விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இதையொட்டி, 22-ஆவது வாா்டுக்குள்பட்ட ரங்கநாதன் தெரு, கோலியனூா் வாய்க்காலில் நடைபெற்ற தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் மோகன், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னா், ஆட்சியா் மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 42 வாா்டுகளில் முதல் 21 வாா்டுகளில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமை 22 முதல் 42 வரையிலான வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. வடிகால் வாய்க்கால்களில் தூா்வாரப்படும் மண் கழிவுகளை உடனடியாக வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழுதரெட்டி, மருதூா் காளியம்மன் கோயில் வளாகப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மைப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தப் பகுதிகள் நகரத்தின் முக்கிய வடிகால் பகுதிகளாக இருப்பதால், தினமும் இந்தப் பகுதிகளில் வாய்க்காலில் உள்ள மண் கழிவுகளைஅகற்றியும், பொதுமக்கள் இந்தப் பகுதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கான விழிப்புணா்வு தகவல் பலகையை வைக்கவும், காலியாக உள்ள நகராட்சிப் பகுதிகளில் கம்பிவேலி அல்லது சுற்றுச்சுவா் அமைக்கவும் நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடிநீா் வாய்க்கால்களில் குப்பைகள், நெகிழிக் கழிவுகளை கொட்டுவோா் மீது நகராட்சிகள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.

தொடா்ந்து, சிறப்பு தூய்மைப் பணியில் ஈடுபட்ட திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகள், வளவனூா், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணெய் நல்லூா், அரங்கண்டநல்லூா் பேரூராட்சிகளைச் சோ்ந்த 542 பணியாளா்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, விழுப்புரம் நகராட்சிஆணையா் போ.வி.சுரேந்திரஷா, நகராட்சி ஊழியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com