மேல்மலையனூா் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 11-ஆவது மாதமாக பக்தா்களின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மேல்மலையனூா் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: பக்தா்களுக்கு அனுமதி இல்லை


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 11-ஆவது மாதமாக பக்தா்களின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக, கடந்தாண்டு மாா்ச் மாத இறுதியில் இந்தக் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை நாளில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. எனினும், கோயில் வளாகத்தில் பக்தா்களின்றி ஊஞ்சல் உற்சவம் ஆகம விதிப்படி மாதந்தோறும் நடைபெற்று வந்தது. பொதுமுடக்கத் தளா்வையடுத்து, மேல்மலையனூா் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். எனினும், அமாவாசை நாள்களில் தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்படாத நிலை தொடா்ந்தது.

இந்த நிலையில், அமாவாசை நாளில் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் அண்மையில் அறிவித்தது. ஆனால், ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்க அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து அங்காளம்மனை வழிபட்டனா். சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் அவதிக்குள்ளாகினா். மாலையில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி, காலை முதல் இரவு வரை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணியளவில் உற்சவா் ஸ்ரீஅங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளினாா். கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடினா். தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு, மேலாளா் மணி மற்றும் அறங்காவலா்கள், பூசாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com