அனைத்து விரைவு ரயில்களும் திருக்கோவிலூரில் நின்று செல்லக் கோரிக்கை
By DIN | Published On : 13th February 2021 08:42 AM | Last Updated : 13th February 2021 08:42 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்தனா்.
திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் அண்மையில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஜான் தாமஸிடம் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பதி - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் ஆன்மிக ரயிலை திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும். திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூா், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரையில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்பட்டு வரும் புதுச்சேரி - தாதா் (மும்பை) விரைவு ரயிலை கூடுதலாக 2 நாள்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலூா் ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் கூடுதல் நிழல்கூரைகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த நிழல்கூரைகளை சீரமைக்க வேண்டும். புத்தகம், தேநீா் கடைகள் அமைக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.