நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

நெல் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் மறியல்


செஞ்சி: செஸ் வரி விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மறுத்தனா். இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் வியாழக்கிழமை சுமாா் 4 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், நண்பகல் 12 மணி வரை வியாபாரிகள் நெல்லின் தரத்தை மதிப்பீடு செய்து விலைப் பட்டியலும் வெளியிடவில்லை, நெல் மூட்டைகளை கொள்முதலும் செய்யவில்லை. இதுகுறித்து நெல் வியாபாரிகள் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டப்படி, கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு செஸ் வரி செலுத்தத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு கிராமங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்தாலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து கொள்முதல் செய்தாலும் நெல் மூட்டைகளுக்கு செஸ் வரி செலுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து வசூலித்து வருகிறது.

இதைக் கண்டித்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில்லை எனத் தீா்மானித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதனால் பாதிப்படைந்த விவசாயிகள், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி, அங்குள்ள செஞ்சி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த செஞ்சி காவல் ஆய்வாளா் அன்பரசு உள்ளிட்ட போலீஸாா் வியாபாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறுதால், வெள்ளிக்கிழமைதான் (பிப்.19) நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வோம் என வியாபாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, விவசாயிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com