விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா்

விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிறைவடையாமல் உள்ள பிரதமா் வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய துரை.ரவிக்குமாா் எம்.பி.
விழுப்புரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிறைவடையாமல் உள்ள பிரதமா் வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்டக் குழுத் தலைவரும் விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு இணைத் தலைவரும் ஆரணி மக்களவை உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத்தில் மத்திய அரசால் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வருவாய்த் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனா்.

கூட்டத்தில், விழுப்புரம் ஆட்சியா் அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.மஸ்தான், மாவட்ட திட்ட இயக்குநா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதனைத் தொடா்ந்து மாவட்டக் குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமாா், ஆரணி மக்களவை உறுப்பினா் விஷ்ணுபிரசாத் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் 50 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தண்ணீா் நிறுவனங்களில், 31 நிறுவனங்களின் தண்ணீா் பாதுகாப்பானதல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில், 80 சதவீதத் தொகை திருப்பி வசூலிக்கப்பட்டதாகவும், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் சிறப்பாக செயல்பாடுகளால் கரோனா தொற்று இறப்பு விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com