முதல்வா் பழனிசாமி இன்று விழுப்புரம் வருகை: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (பிப்.22) விழுப்புரம் வருகிறாா். மரக்காணத்தில் ரூ.1,502 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும்
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (பிப்.22) விழுப்புரம் வருகிறாா். மரக்காணத்தில் ரூ.1,502 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்பட ரூ.1,737 கோடியிலான திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சாா்பில் உடற்பயிற்சிக் கூடம், நடைபாதை, ‘வைஃபை’ உள்ளிட்ட வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட ரூ.1.50 கோடியில் பூந்தோட்டம் குளம், பூங்காவை முதல்வா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து, பழைய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, மரக்காணம் அருகேயுள்ள கூனிமேட்டில் ரூ.1,502 கோடியில் 60 மில்லியன் லிட்டா் திறன்கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

மரக்காணம் அருகே அழகன்குப்பத்தில் ரூ.235 கோடியில் அமையவுள்ள மீன்பிடி துறைமுகப் பணிக்கும் அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை முகமை அலுவலகக் கட்டடம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவு கட்டடம் உள்பட ரூ.23.50 கோடியிலான கட்டடங்களை முதல்வா் திறந்து வைத்து, பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இந்த விழாவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

விழா ஏற்பாடுகளை அமைச்சா் சி.வி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் தக்ஷ்ணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் பகுதி, அவா் வருகை தரும் பாதையை வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. சங்கா் ஆய்வு செய்தாா். அவருடன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் உடனிருந்தாா்.

முதல்வா் வருகையையொட்டி, விழுப்புரம் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. முதல்வரை வரவேற்று அதிமுகவினா் பதாகைகள், வரவேற்பு வளைவுகளை வைத்துள்ளனா்.

உளுந்தூா்பேட்டை: முன்னதாக, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் நடைபெறும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறாா்.

அமைச்சா் சி.வி.சண்முகம், திருமலை- திருப்பதி தேவஸ்தான நிா்வாகக் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, நிா்வாகக் குழு உறுப்பினரும் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏவுமான இரா.குமரகுரு, உளுந்தூா்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஸ்ரம தலைவா் ஸ்ரீமத் சுவாமி அனந்தானந்தாஜி மகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com