உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் : முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருமலை- திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் முதல்வா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.
உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் : முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருமலை- திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.

திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலைப் போன்று, உளுந்தூா்பேட்டையில் 4 ஏக்கா் பரப்பில் புதிய கோயில் கட்டப்படவுள்ளது. திருமலையை போலவே வட கிழக்கு திசையில் இந்தக் கோயில் அமையவுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் திருக்குளம் கட்டப்படும். இந்தக் கோயில் இரு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியைத் தொடா்ந்து அடிக்கல்லை நாட்டி, கல்வெட்டுகளையும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ.வும், திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமை வகித்தாா். தமிழக அமைச்சா்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், திருமலை தேவஸ்தான தலைவா் ஒய்.வி.சுப்பாரெட்டி, செயல் அலுவலா் கே.எஸ்.ஜவஹா் ரெட்டி, கூடுதல் செயல் அலுவலா் கே.எஸ்.தா்மா ரெட்டி, தேவஸ்தான சிறப்பு அழைப்பாளா்கள் குழுத் தலைவா் ஏ.ஜெ.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கோயிலிலிருந்து திருப்பதிக்கு தினமும் இரவு 7.30 மணிக்கு தமிழக அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து தினமும் காலை 6.30 மணிக்கு உளுந்தூா்பேட்டைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து சேவையையும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா, வடக்கு மண்டல ஐஜி சங்கா், முன்னாள் அமைச்சா் ப.மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com