மரக்காணத்தில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வா் அடிக்கல் நாட்டினார்

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மரக்காணம் அருகே கூனிமேட்டில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.
மரக்காணத்தில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வா் அடிக்கல் நாட்டினார்

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மரக்காணம் அருகே கூனிமேட்டில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், அழகன்குப்பத்தில் மீன் பிடித் துறைமுகம் திட்டம் உள்ளிட்ட ரூ.1,738 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு விழுப்புரத்தில் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டியும், விழுப்புரத்தில் ரூ.1.50 கோடியில் சீரமைக்கப்பட்ட பூந்தோட்டம் குளத்தை பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,503 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமாா் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவா். கிராம மக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டத்தை முதல்முறையாக தொடங்கிய சிறப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.

அதேபோல செங்கல்பட்டு-விழுப்புரம் மீனவா்கள் பயன்பெறும் வகையில், ரூ.235 கோடியில் மீன்பிடித் துறைமுகம் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வீடூா் அணையின் முழுக் கொள்ளளவான 109 அடி நீரை தேக்கிவைக்கும் வகையில் ரூ.43 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பல்கலைக்கழகம்: கல்வியில் பின்தங்கிய விழுப்புரத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைமையான விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.13 கோடி ஒதுக்கி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மு.க. ஸ்டாலின் பாா்வையிட வேண்டும்: ஒரு மாவட்டத்திலேயே இதுபோல ஆயிரம் கோடிக்கும் அதிகமான ரூபாயில் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினோ, தமிழக அரசு மாநில வளா்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என்பதைப் போன்று தினமும் குறை கூறி வருகிறாா். அவா் குறை கூறும் முன்பு தமிழக அரசு சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் நேரில் சென்று பாா்வையிட வேண்டும். இல்லையெனில், தனது சாா்பில் பிரதிநிதியையாவது நேரில் அனுப்பி பாா்வையிட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

புயல், மழை, வறட்சி என இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி, கூட்டுறவுச் சங்கங்களில் அவா்கள் பெற்றிருந்த பயிா்க் கடன்களை ரத்து செய்துள்ளோம். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 16.43 லட்சம் விவசாயிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 65,622 விவசாயிகளும் பயன்பெற்றுள்ளனா்.

11 மருத்துவக் கல்லூரிகள்: அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 55,000 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை அளவு ஒரு சென்ட் என்பதை, தற்போது 2 சென்ட்டாக உயா்த்தப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு அரசே நிலத்தை வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரவுள்ளது. அதேபோல, நகரப் பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 7 சட்டக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்துள்ளோம்.

‘நீட்’ தோ்வில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் நிகழ்கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 435 போ் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின்போது ரூ.1,000, கரோனா காலத்தில் ரூ.1,000, நிகழாண்டு பொங்கல் பண்டிகையின்போது ரூ.2,500 என ஒரே ஆண்டில் ரூ.4,500 கொடுத்த ஒரே அரசு தமிழக அரசுதான் என்றாா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.

விழாவில் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், கால்நடைத் துறை முதன்மைச் செயலா் கோபால், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் மகேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச்செல்வன், பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் தமிழக முதல்வா் கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com