விவசாய நிதித் திட்ட முறைகேடு: பொங்கல் பரிசுத் தொகையில் பிடித்தம் இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்ட போலி பயனாளிகளிடமிருந்து இதுவரை ரூ.29 கோடி வசூலிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்ட போலி பயனாளிகளிடமிருந்து இதுவரை ரூ.29 கோடி வசூலிக்கப்பட்டது. மேலும் மோசடியாளா்களிடமிருந்து பொங்கல் பரிசுத் தொகையை பிடித்தம் செய்வதாக எழுந்த புகாரை அதிகாரிகள் மறுத்தனா்.

தமிழகத்தில் பிரதமரின் விவசாய ஊக்க நிதித் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத போலி பயனாளிகளைச் சோ்த்து, தரகா்கள் சிலா் நிதி முறைகேடு செய்திருந்தது கண்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 1.10 லட்சம் போலி பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவா்களது வீடுகளுக்கு வேளாண் குழுவினா் நேரடியாகச் சென்று தொகையை பறிமுதல் செய்து வருகின்றனா். இதுவரை, 94 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசு சாா்பில் பொது மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பாக ரூ.2,500 ஊக்கத் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விவசாய ஊக்க நிதித் திட்டத்தில் முறைகேடாக சோ்ந்த பயனாளிகளிடம் வேளாண் துறையினா், பொங்கல் பரிசுத் தொகையில் பிடித்தம் செய்வதாக புகாா் எழுந்தது. குறிப்பாக, முகையூா், வல்லம் வட்டாரங்களில் தொகை பிடித்தம் செய்யப்படுவதாக, திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதிகாரிகள் மறுப்பு...: இது தொடா்பாக, மாவட்ட வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது: யாரிடமும் பொங்கல் பரிசுத்தொகையை பிடித்தம் செய்யவில்லை. நிரவி, புரெவி புயல் பயிா் சேதக்கணக்கெடுப்பில் வேளாண் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த கணக்கெடுப்புக்குப் பிறகே, வழக்கம் போல் போலி பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வசூலிக்கும் பணி மீண்டும் நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com