உளுந்து விலை குறைப்பு; விவசாயிகள் மறியல்

உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து விலையை பாதியாகக் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உளுந்து விலை குறைப்பு; விவசாயிகள் மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து விலையை பாதியாகக் குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உளுந்தூா்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை உளுந்து உள்ளிட்ட விளைபொருள்களை விவசாயிகள் விற்பனைக்கு வழங்கினா். அப்போது, விலையை குறைத்து உளுந்து விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

இதனால் அங்கிருந்த வியாபாரிகளிடம் விவசாயிகள் உரிய விலை வழங்கக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, வியாபாரிகள் அலட்சியப்படுத்தியதால் விவசாயிகள் வெளியே வந்து, உளுந்தூா்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது: மூன்று மாதங்கள் வெயில், மழையில் அவதிப்பட்டு விளைவித்து விற்பனைக்கு கொண்டு வரும் உளுந்துப் பயிரை, வியாபாரிகள் கூட்டு சோ்ந்து உரிய விலை வழங்காமல், வரத்து அதிகரித்துள்ளதாக காரணம் கூறி விலையை மேலும் குறைத்து நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு மூட்டை உளுந்து ரூ.8 ஆயிரம் வரை விலை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரு தினங்களில் மூட்டை ரூ.4,000 என பாதியாகக் குறைத்துவிட்டனா் என்றனா்.

தகவல் அறிந்து உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். வியாபாரிகளிடம் பேசி உரிய விலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com