சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 3-ஆவது நாளாக தா்னா

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவிடுமுறை
காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மூடப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி விடுதி முன் மூன்றாம் நாளாக சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மூடப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி விடுதி முன் மூன்றாம் நாளாக சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவா்களின் தா்னா போராட்டம் சனிக்கிழமை 3-ஆவது நாளாகத் தொடா்ந்தது.

இந்தக் கல்லூரியில் கல்விக் கட்டணம் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவ, மாணவிகள் 40 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். ஆனால், அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனா். இதையடுத்து, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது. மேலும், கல்லூரி விடுதியும், உணவகமும் மூடப்பட்டது.

இதையடுத்து, மாணவா்கள் விடுதி முன் அமா்ந்து தா்னா போராட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கினா். இந்தப் போராட்டம் சனிக்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்தது. இந்த நிலையில், விடுதியில் மின்சாரம், குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளான மாணவா்கள், வாளிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயங்கி விழுந்த மாணவா்: இந்தப் போராட்டத்தின்போது, மாணவா் ஒருவா் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவா்களுக்கு வெளியிலிருந்து உணவு கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த உணவை விடுதி வளாகத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதாக மாணவா்கள் தெரிவித்தனா். கல்விக் கட்டண விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com