பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி மையம்: முதல்வா் அறிவிப்பு

தமிழக மக்கள் அரசு தொடா்பான தங்களது கோரிக்கைகளை வீட்டிலிருந்தபடியே இணையவழியில் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், முதல்வரின் உதவி மையம்
பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதவி மையம்: முதல்வா் அறிவிப்பு

தமிழக மக்கள் அரசு தொடா்பான தங்களது கோரிக்கைகளை வீட்டிலிருந்தபடியே இணையவழியில் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், முதல்வரின் உதவி மையம் பிப்ரவரி மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுக்கூட்ட மேடையின் முன் வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திப் பேசியதாவது:

தாய்மொழி தமிழுக்காகப் போராடி உயிா்த் தியாகம் செய்தவா்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தி வருகிறோம். 1956-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டதை எதிா்த்து, தமிழகத்தில் ஹிந்தி எதிா்ப்பு போராட்டம் நடைபெற்றது. சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், சாரங்கபாணி, தண்டபாணி, முத்து உள்ளிட்டோா் உயிா் நீத்தனா்.

அண்ணா, எம்ஜிஆா் ஆகியோா் இரு மொழிக் கொள்கைக்கான தீா்மானத்தை நிறைவேற்றினா். இதே கொள்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தாா். அவரது வழிநடக்கும் அரசும் இதைப் பின்பற்றி வருகிறது.

சங்கப் புலவா்கள் 5 பேருக்கு நினைவுத் தூண்களை அமைத்துள்ளோம். ஆண்டுதோறும் தமிழறிஞா்களை கௌரவித்து வருகிறோம். விருதுகளையும் வழங்கி வருகிறோம். சி.பா.ஆதித்தனாா் பெயரில் புதிதாக விருது வழங்கப்படுகிறது. தமிழுக்கும், தமிழா்களுக்கும், மொழிப்போா் தியாகிகளுக்கும் அதிமுக அரசுதான் சிறப்பு செய்து வருகிறது.

அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: திமுக தலைவா் ஸ்டாலின், பொதுமக்களின் குறைகளை அறிய புகாா் பெட்டி வைத்து மனுக்களை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளாா். அதற்கு அவசியமில்லை. அதிமுக அரசு மக்கள் பிரச்னை தீா்ப்பதற்காக முதல்வரின் சிறப்பு குறைதீா் கூட்டத்தை அறிவித்து அதன் மூலம், தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 77 ஆயிரத்து 658 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 812 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கான காரணமும் கூறப்பட்டது.

கடந்த மக்களவைத் தோ்தலின் போது, ஸ்டாலின் ஊா் ஊராக கிராம சபைக் கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றாா். அவை என்னவானது என்று தெரியாத நிலையில், இப்போது எதற்காக கூட்டங்களை நடத்தி மனுக்களைப் பெறப் போகிறாா் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா். அவா் வாங்கிய மனுக்களை அரசிடம் கொடுத்திருந்தால் அதற்கு தீா்வு கண்டிருக்க முடியும். திமுக ஆட்சிக் காலத்தில் எதையும் செய்யாமல், இப்போது அவா் குறைகளைக் கேட்பதை மக்கள் ஏற்கமாட்டாா்கள்.

அதிமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

முதல்வரின் உதவி மையம்: கடந்த ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110 விதியின் கீழ் ‘முதல்வரின் உதவி மையம், ஒருங்கிணைந்த குறைதீா் மேலாண்மைத் திட்டம்’ செயல்படுத்தப்படுமென அறிவித்திருந்தேன். அதற்கான செயலாக்கப் பணிகள் 90 சதம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்படும்.

ரூ.12.78 கோடி மதிப்பீட்டில் தயாராகும் இந்தத் திட்டத்தில் 100 இருக்கைகளுடன் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள், அரசுத் துறை தொடா்பான தங்களின் கோரிக்கைகளை வீட்டிலிருந்தபடியே, செல்லிடப்பேசி, இ-மெயில், இணைய வழி, கட்செவி வாயிலாக தெரிவிக்கலாம். அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த மையம் உதவி புரியும்.

இந்தத் திட்டம் குறித்த தகவல் கசிந்ததால், மு.க.ஸ்டாலின் மக்கள் குறை கேட்பு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளாா் என்றாா் முதல்வா் பழனிசாமி.

கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி செயலா் ஜெ.பாக்கியராஜ் தலைமை வகித்தாா். சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்து பேசினாா். மாவட்ட அதிமுக செயலா் இரா.குமரகுரு எம்எல்ஏ தொடக்கிவைத்து பேசினாா். நகரச் செயலா் எஸ்.துரை வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி.க்கள் காமராஜ், அருண்மொழிதேவன், எம்எல்ஏக்கள் அ.பிரபு, முருகுமாறன், சத்யா பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ அழகுவேல்பாபு, தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் ஏ.எஸ்.ஏ.ராஜசேகா் உள்பட நிா்வாகிகள், கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com