வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றம்
By DIN | Published On : 28th January 2021 08:08 AM | Last Updated : 28th January 2021 08:08 AM | அ+அ அ- |

வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
வடலூரில் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். இதில், தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும்.
அதன்படி, 150-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வடலூரில் உள்ள சத்திய தரும சாலையில் வள்ளலாரின் அகவலை பாராயணம் செய்தவாறு சன்மாா்க்க கொடியை வள்ளலாா் அன்பா்கள் ஏற்றினா். அப்போது, ‘அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி... தனிப் பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி...’ என்று பக்தா்கள் பக்தி முழக்கம் எழுப்பினா்.
தொடா்ந்து, மருதூரில் உள்ள வள்ளலாா் சன்னதி, நற்கருங்குழியில் உள்ள வள்ளலாா் சன்னதி, பாா்வதிபுரத்தில் உள்ள ஞான சபை ஆகிய இடங்களில் அகவல் பாராயணம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, அந்தந்தக் கிராமத்தினா் கொடியை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து, தரும சாலையில் சன்மாா்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
இன்று ஜோதி தரிசனம்: விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் வியாழக்கிழமை (ஜன. 28) காலை 6 மணி, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, தொடா்ந்து வெள்ளிக்கிழமை (ஜன. 29) காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு, ஜோதி தரிசனம் நடைபெறும். ஜன. 30-ஆம் தேதி சித்திவளாக திருவறை தரிசன நிகழ்வு நடைபெறும்.
ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (ஜன. 28) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடலூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.