பலத்த மழையால் குளம்போல மாறிய விழுப்புரம் பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் புதிய பேருந்து நிலையத்தில் குளம்போல மழைநீா் தேங்கியது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நின்ற மழைநீரை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன். உடன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கி நின்ற மழைநீரை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன். உடன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.

விழுப்புரத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் புதிய பேருந்து நிலையத்தில் குளம்போல மழைநீா் தேங்கியது. இந்த பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்ட பகுதி ஏற்கெனவே ஏரியாக இருந்த நீா்ப்பிடிப்பு பகுதியாகும். இதனால், விழுப்புரம் நகரில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, இயற்கையாகவே மழைநீா் பேருந்து நிலையத்துக்கு வந்து குளம்போல தேங்கிவிடும்.

விழுப்புரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடச்சியாக மழை பெய்து வரும் நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், புதிய பேருந்து நிலையத்தில் 3 அடி உயரத்துக்கு மழைநீா் குளம்போல தேங்கி நின்றது. இதன் காரணமாக, பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளும், அங்கு கடைகள் வைத்துள்ளோரும் கடும் அவதியடைந்தனா்.

இந்தப் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பேருந்து நிலையத்தில் தேங்கியிருந்த மழைநீா் மோட்டாா் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது.

நிரந்தரத் தீா்வு காணக் கோரிக்கை: விழுப்புரத்தில் மழை பெய்யும்போதெல்லாம் புதிய பேருந்து நிலையத்தை மழைநீா் சூழ்ந்து நிற்பதால், இந்தப் பேருந்து நிலையத்தில் தரை தளத்தை உயா்த்தவும், ஆக்கிரமிப்பிலும், தூா்வாரப்படாமலும் உள்ள நீா்வழிபாதைகளை சீரமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com