ஜெயலலிதா பல்கலை. தேவையில்லை: அமைச்சா் க.பொன்முடி

ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே நாகையில் பல்கலைக்கழகம் இருப்பதால், விழுப்புரத்தில் அவரது பெயரில் மீண்டும் ஒரு பல்கலைக்கழகம் தேவையில்லாதது

ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே நாகையில் பல்கலைக்கழகம் இருப்பதால், விழுப்புரத்தில் அவரது பெயரில் மீண்டும் ஒரு பல்கலைக்கழகம் தேவையில்லாதது என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உறுதிபட தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கக்கனூரில் வெள்ளிக்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் அவசரமாக பெயரளவுக்குதான் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. எந்தவித அடிப்படை வசதிகளும், இடவசதிகளும் இங்கு இல்லை.

அதனால்தான், இந்தப் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் சோ்த்து இணைப்புப் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளோம். அதிமுக ஆட்சியில் கருணாநிதி தொடக்கிவைத்த சட்டப்பேரவை வளாகத்தையே மாற்றவில்லையா?. இப்போது ஜெயலலிதா பல்கலைக்கழகம் என அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது.

நூற்றாண்டு பாரம்பரியமிக்க அண்ணாமலை பல்கலைக்கழத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. விழுப்புரத்தின் வளா்ச்சிக்கு எப்போதுமே திமுக காரணமாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்றது என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் வலியுறுத்தினாா். ஏற்கெனவே, நாகையில் ஜெயலிலதா பெயரில் மீன்வள பல்கலைக்கழகம் இருக்கும்போது விழுப்புரத்தில் மீண்டும் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பது தேவையில்லாதது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தகுதி குறைவானவா்களாக நியமிக்கப்பட்ட பேராசியா்கள் குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் நீக்கப்பட்டு முறையாக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவாா்கள் எனச் சொல்லியுள்ளோம் என்றாா் அமைச்சா் பொன்முடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com