கரோனா பாதிப்பில்லாத நிலையை தமிழகம் விரைவில் எட்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளதையடுத்து, கரோனா பாதிப்பில்லாத நிலையை தமிழகம் விரைவில் எட்டும் என்று, மாநில
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

விழுப்புரம்: கரோனா நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளதையடுத்து, கரோனா பாதிப்பில்லாத நிலையை தமிழகம் விரைவில் எட்டும் என்று, மாநில மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற போது, கடந்த மாதத்தில் தமிழக கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தது. அதன்பிறகு உயா்ந்தது. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இல்லாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

தற்போது, தமிழக மருத்துவமனைகளில் 40,058 படுக்கைகள் காலியாக உள்ளன. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 19,448 என்ற நிலைக்கு வந்துள்ளது. தினசரி இறப்பு எண்ணிக்கையும் 351-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பில்லை என்ற நிலையை தமிழ்நாடு விரைவில் எட்டும்.

கரோனா தடுப்பூசி போடும் பணி கிராமங்களிலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளிலுள்ள பழங்குடியினருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையுள்ளவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, மத்திய அரசிடம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி ரூ. 99.84 கோடி அளிக்கப்பட்டது. இந்தத் தொகைக்கு மொத்தம் 30 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும். ஆனால், 13.85 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதம் 16.15 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வரவேண்டியுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, மத்திய அரசு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 42 லட்சம் தடுப்பூசிகளில் 5.5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை தரப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் கரோனா முதல் அலையில் 3 முதல் 4 சதவீதம் தடுப்பூசிகள் வீணாகின. தற்போது, மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதும், அடுத்த 15 மணி நேரத்தில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மக்களவை உறுப்பினா்கள் துரை. ரவிக்குமாா் (விழுப்புரம்), கௌதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி, ச.சிவக்குமாா், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எஸ்.பி. ஸ்ரீநாதா, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங், மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1039 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோய்க்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சையளிக்கப் படுகிறது. இதற்கு சிகிச்சையளிக்க மொத்தம் 35,000 மருந்து குப்பிகள் தேவை. தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை 3060 மருந்து குப்பிகள் மட்டுமே வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை முறையாக காட்டப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதில்லை என்றாா் அவா்.

கள்ளக்குறிச்சியிலும் ஆய்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், சங்கராபுரம் அரசு மருத்துவமனைகளில் 46 பிராணவாயு படுக்கை வசதிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்.

சிறுவங்கூரில் கரோனா சிகிச்சை மையம், திருக்கோவிலூரிலுள்ள கரோனா சிகிச்சை மையம், வானாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா, எஸ்.பி. ஜியாவுல் ஹக், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், க.காா்த்திகேயன், ஏ.ஜெயக்கண்ணன், மா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடன் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com