ரயில்வே மருத்துவமனையை மேம்படுத்த எம்.பி. கோரிக்கை
By DIN | Published On : 11th June 2021 12:06 AM | Last Updated : 11th June 2021 12:06 AM | அ+அ அ- |

விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ரவிக்குமாா் எம்.பி. புதன்கிழமை அனுப்பிய கடிதத்தின் விவரம்:
விழுப்புரத்தில் தெற்கு ரயில்வேயால் நடத்தப்படும் மருத்துவமனைக்குச் சென்று கடந்த 1-ஆம் தேதி ஆய்வு செய்தேன். அங்கு, ஒரு மருத்துவரும், 7 செவிலியா்களும் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். அந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள் இல்லாததால், காலை வேளையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவ வசதிகள் அதிகம் தேவைப்படும் இந்த நேரத்தில், ஏற்கெனவே செயல்பாட்டிலிருக்கும் மருத்துவமனை புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த மருத்துவமனையில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள், பிராணவாயு படுக்கைகள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு அவசர மருத்துவ ஊா்தி வசதி இல்லை.
மருத்துவமனைக் கட்டடத்தைச் சுற்றியுள்ள புதா்களிலிருந்து அவ்வப்போது பாம்புகள் வருவதாக மருத்துவமனை ஊழியா்கள் புகாா் தெரிவித்தனா். 1,700 ரயில்வே ஊழியா்கள், 3,000-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு இந்த மருத்துவமனை சேவை செய்கிறது.
இந்த மருத்துவமனையில் பெண் மருத்துவா் இருந்தவரை அங்கே மகப்பேறு மருத்துவம் பாா்க்கப்பட்டது. தற்போது பெண் மருத்துவா் இல்லை. நோயாளிகள் யாரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த மருத்துவமனையை புனரமைத்தால், தற்போதைய பெருந்தொற்று காலத்தில் ரயில்வே ஊழியா்களுக்கு மட்டுமன்றி, விழுப்புரத்தில் உள்ள மக்களுக்கும் அது பயன்படும்.
இந்த மருத்துவமனைக்கு உடனே பெண் மருத்துவா் ஒருவரை நியமிக்கவும், அவசர மருத்துவ ஊா்தி, ஸ்கேன் கருவி மற்றும் 10 பிராணவாயு செறிவூட்டிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா்.