உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் காவல் ஆய்வாளா் பலி
By DIN | Published On : 11th June 2021 12:03 AM | Last Updated : 11th June 2021 12:03 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதியதில் காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (56). இவா், சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் பண்டகப் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த ராமகிருஷ்ணன், பணிக்குத் திரும்ப வியாழக்கிழமை காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தாா்.
பிற்பகல் 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே இறஞ்சி பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை வலதுபுறமாக ராமகிருஷ்ணன் திருப்பியதாகத் தெரிகிறது. அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த எடைக்கல் போலீஸாா் மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.