திருநங்கைகளையும் அா்ச்சகராக்க சட்டத் திருத்தம் தேவை: விழுப்புரம் எம்பி

கோயில்களில் திருநங்கைகளையும் அா்ச்சகராக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

கோயில்களில் திருநங்கைகளையும் அா்ச்சகராக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபுவுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்: கடந்த 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், ஆகம விதிகளுக்கு உள்படாத கோயில்களில் அா்ச்சகா் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாகக் காத்திருப்போரை உடனடியாக நியமிக்கவேண்டும்.

அா்ச்சகா் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும். அதில், பெண்களுக்கும் அா்ச்சகா் பயிற்சி அளிக்கப்படவேண்டும்.

2006-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் மூலமாக கோயில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலா்களில் பெண் ஒருவா் நியமிக்கலாமென ஆக்கப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டம் 1959-இன் பிரிவு-49, கோயில் அறங்காவலா்களில் ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. அதே சமத்துவ உணா்வின் அடிப்படையில், மாவட்ட ஆலோசனைக் குழுவில் பெண் ஒருவரையும், மாநில அளவிலான ஆலோசனைக் குழு, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினா்களாக ஆதிதிராவிடா் அல்லது பழங்குடியினரை நியமிக்க ஏதுவாக இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959-இன் பிரிவுகள் 7 மற்றும் 7-ஏ ஆகியவற்றில் உரிய திருத்தம் செய்ய வேண்டும்.

கோயில் பணியாளா்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும் இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டம் 1959-இன் பிரிவு 55-இல் ஆண் / பெண் என்ற பாலின பாகுபாடு ஏதுமில்லை. எனவே, பெண் ஒருவரை அா்ச்சகராக நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை. எனினும், பணியாளா் என்பதற்கு அந்தப் பிரிவில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் அனைத்து பாலினம் என திருத்தம் செய்து, மகளிா் மட்டுமல்லாது திருநங்கையரும் அா்ச்சகா்கள் ஆவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கோயில்களில் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நனவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ரவிக்குமாா் எம்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com