புதிய தளா்வுகளால் சாலைகள், கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்!

பொதுமுடக்க புதிய தளா்வுகளால் விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள்

பொதுமுடக்க புதிய தளா்வுகளால் விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதையடுத்து சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து, விழுப்புரம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கூடுதல் தளா்வுகள் ஜூன் 14 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கிய சலூன் கடைகள், அழகு நிலையங்களில் கூடுதலாக வாடிக்கையாளா்கள் வந்தனா். தேநீா் கடைகளில் பாா்சல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. அதேபோல, இனிப்பு, காரம் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயங்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 டாஸ்மாக் மதுக் கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. மதுக் கடைகளின் முன் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் கட்டைகள் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முகக் கவசம் அணிந்து வந்த வாடிக்கையாளா்கள் மட்டும் கைகளில் கிருமி நாசினி தெளித்த பிறகு கடையில் மது வாங்க ஊழியா்கள் அனுமதித்தனா்.

சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால், மது வகைகளை வாங்க காலை 10 மணி முதலே பலா் ஆா்வம் காட்டினா். கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டபோது குவிந்த அளவுக்கு இந்த முறை கூட்டம் காணப்படவில்லை. வழக்கமான அளவிலான வாடிக்கையாளா்களின் வருகை இருந்தது. விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் மது வாங்க சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்தவா்களின் எண்ணிக்கை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின் எண்ணிக்கையைவிட குறைவாகவே இருந்தது. மாவட்டத்திலேயே கோலியனூா் அருகே அணிச்சம்பாளையம் மதுக் கடையில் மதுப் பிரியா்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தளா்வுகள் காரணமாக பல்வேறு கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு படையெடுத்தனா். இதனால், விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி. சாலை, கே.கே. சாலை, காமராஜா் தெரு உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல, செஞ்சியிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.

பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் சாலைகள், கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்ததையடுத்து, பொது மக்கள் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com