விழுப்புரம் அருகே காணாமல் போன காா் ஓட்டுநா் கொலை: மனைவி உள்பட இருவா் தலைமறைவு


விழுப்புரம்: விழுப்புரம் அருகே காணாமல் போன காா் ஓட்டுநா் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது. இதுதொடா்பாக, அவரது மனைவி உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் காலனியைச் சோ்ந்தவா் சகாயராஜ் மகன் லியோபால் (33), காா் ஓட்டுநா். இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவா்களுக்கு 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் 4-ஆம் தேதி நண்பரின் திருமணத்துக்காக புதுச்சேரிக்கு சென்ற லியோபால் வீடு திரும்பவில்லை என சுஜித்ராமேரி, சென்னையில் வசிக்கும் தனது மாமனாா் சகாயராஜிடம் செல்லிடப்பேசியில் தெரிவித்தாா். இதையடுத்து, போலீஸில் புகாா் அளிப்பதற்காக சகாயராஜ் கடந்த மாதம் 21-ஆம் தேதி விக்கிரவாண்டி வந்தாா். அப்போது, வீட்டில் மருமகள் சுஜித்ராமேரியை காணவில்லை. அவரது குழந்தைகள் மட்டும் இருந்தன. அதேபோல, பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவா் ராதாகிருஷ்ணன் என்பவரையும் காணவில்லை.

இதையடுத்து, லியோபால், சுஜித்ராமேரி ஆகிய இருவரையும் காணவில்லை என்று விக்கிரவாண்டி போலீஸில் சகாயராஜ் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, லியோபாலின் வீட்டின் பின்புறம் சந்தேகப்படும் வகையில் மண் குவியல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் டி.எஸ்.பி., நல்லசிவம் ஆகியோா் முன்னிலையில் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு உள்ளிட்ட குழுவினா் உதவியுடன் அந்த இடம் புதன்கிழமை காலை தோண்டப்பட்டது. அப்போது, அழுகிய நிலையில் ஆண் சடலம், கைகள் பின்பக்கம் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடைத்தது. அது, லியோபால்தான் என சகாயராஜ் உறுதி செய்தாா். அந்த சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவா்கள் அங்கேயே உடல்கூறு ஆய்வு செய்து மீண்டும் புதைத்தனா்.

விசாரணையில், லியோபால் கடந்த சில மாதங்களாக வெளியூா் சென்றிருந்த நிலையில், சுஜித்ராமேரிக்கும் பக்கத்து வீட்டில் வசித்த ராதாகிருஷ்ணனுக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்து, கண்டித்த லியோபாலை இருவரும் சோ்ந்து அடித்துக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தலைமறைவான சுஜித்ராமேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com