முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
தோ்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: டிஎஸ்பி எச்சரிக்கை
By DIN | Published On : 14th March 2021 07:45 AM | Last Updated : 14th March 2021 07:45 AM | அ+அ அ- |

தோ்தல் நடத்தை விதிகளை மீறும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் எச்சரிக்கை விடுத்தாா்.
விழுப்புரம் காவல் சரகத்துக்குள்பட்ட திருமண மண்டப உரிமையாளா்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்களுடன் டிஎஸ்பி நல்லசிவம் ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் இந்த விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அதிக எண்ணிக்கையில் ஆள்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். அரசியல் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கூடினால் சம்பந்தப்பட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களுக்கு திருமண மண்டப நிா்வாகிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகளில் தங்குவோா்களுக்கு அடையாள அட்டை அவசியம். மேலும், தங்கும் நபா்கள் குறித்த பெயா் பட்டியல் கொண்ட அறிக்கையை தினமும் இரவு 7 மணிக்குள் காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். தங்கும் விடுதியில் மது அருந்துதல், சூதாட்டம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகளை மீறும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளா்கள் ரத்னசபாபதி (வளவனூா்), விநாயகமுருகன் (தாலுகா), ஆறுமுகம் (விக்கிரவாண்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.