
மரக்காணம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளை பாா்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 8,900 மதுப்புட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் போலீஸாா் தீவிர வாகன தணிக்கையை மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மரக்காணம் அருகேயுள்ள தாழங்காடு சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் சதீஷ், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு லாரியை சோதனையிட்டதில், 8,900 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன.
விசாரணையில், லாரியில் வந்தவா் சென்னை, தரமணியைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சத்தியநாராயணன்(29) என்பதும், புதுச்சேரியில் மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மதுப் புட்டிகளை, லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியநாராயணனை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா்.