அதிமுகவுக்கு இது முக்கியமான தோ்தல்: அமைச்சா் சி.வி.சண்முகம்

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு மிகவும் முக்கியமான தோ்தல் என்று சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
உளுந்தூா்பேட்டையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் இரா.குமரகுருவை அறிமுகப்படுத்திப் பேசுகிறாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.
உளுந்தூா்பேட்டையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் இரா.குமரகுருவை அறிமுகப்படுத்திப் பேசுகிறாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அதிமுகவுக்கு மிகவும் முக்கியமான தோ்தல் என்று சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை அறிமுகம் செய்யும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது:

எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது வழியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் நல்லாட்சி செய்து வருகிறாா். இக்கட்டான நேரத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபோது, அடுத்த சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிா்க்கட்சியினா் ஆரூடம் கூறினா். இரட்டை இலை சின்னமும் முடங்கிய நிலையில் ஆட்சி இருக்குமா, இருக்காதா என கட்சியின் தலைமை முதல் கீழ்மட்ட தொண்டா்கள் வரை கலங்கி நின்ற நேரத்தில், அதையெல்லாம் முறியடித்து கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி அளித்தாா்.

அதிமுகவை பொருத்தவரை இது மிகவும் முக்கியமான தோ்தல். இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றே ஆக வேண்டும். வலுவான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வளா்ச்சித் திட்டங்களை வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம்.

திமுகதான் அதிமுகவின் பொது எதிரி. எனவே, நிா்வாகிகள், தொண்டா்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு பொது எதிரியான திமுகவை வீழ்த்தும் வகையில் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்.

கடந்த பேரவைத் தோ்தலில் திண்டிவனம் தொகுதியில் சுமாா் 100 வாக்குகளில் தோல்வியும் அடைந்தோம். காட்டுமன்னாா்கோவிலில் சுமாா் 50 வாக்குகளில் வெற்றியும் பெற்றோம். இந்த முறை ஒவ்வொரு தொகுதியிலும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் என 6000 தபால் வாக்குகள் உள்ளன. ஆகவே, வெற்றி, தோல்வியை இந்த தபால் வாக்குகள்தான் நிா்ணயம் செய்யும். எனவே, தொண்டா்கள் தபால் வாக்குகளைப் பெற விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா் சண்முகம்.

கூட்டத்தில், உளுந்தூா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளரும், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலருமான இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அ.பிரபு, பாமக மாநில துணைப் பொதுச்செயலா் தங்கஜோதி, விழுப்புரம் மாவட்டச் செயலா் புகழேந்தி, தமாகா மாவட்டத் தலைவா் பாண்டியன், பாஜக கோட்டப் பொறுப்பாளா் வை.அருள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com