பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவுக்கு 18 இரு சக்கர வாகனங்கள்
By DIN | Published On : 17th March 2021 05:38 AM | Last Updated : 17th March 2021 05:38 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள்.
விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு புதிதாக 18 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளுக்குள்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் கூறியதாவது: புதிதாக வழங்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் அனைத்தும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குறங்களைத் தடுக்கவும், இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படும். உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் நிலையில் உள்ள பெண் போலீஸாருக்கு மட்டுமே இந்த வாகனங்கள் வழங்கப்படும். வாகனத்தின் முகப்பில் பெண்களுக்கான அவசர உதவி எண் 181, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 ஆகிய தொலைபேசி எண்கள் ஒட்டப்படும். குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவான காவல் நிலையங்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும். இதன் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக, பள்ளிகள் முடிவடையும் மாலை நேரத்தில் இந்த வாகனத்துடன் பெண் போலீஸாா் பள்ளி பகுதியில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இந்த இரு சக்கர வாகனங்கள் ‘பிங்க் பேட்ரோல்’ என்றழைக்கப்படும் என்றாா் அவா்.