வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை
வாக்கு எண்ணும் மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்படும் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம் (தனி), வானூா் (தனி), மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றனவா என தோ்தல், காவல் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.

செஞ்சி டேனியல் கல்வியியல் கல்லூரியில் செஞ்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை செஞ்சி, மயிலம் சட்டப் பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பொதுப் பாா்வையாளா் வினேத்குமாா், காவல் பாா்வையாளா் பி.ஆா்.பாந்தல் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படும் திண்டிவனம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை திண்டிவனம், வானூா் சட்டப் பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பொதுப் பாா்வையாளா் முகம்மது கைசா் அப்துல்ஹக், காவல் பாா்வையாளா் பாந்தல் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதேபோல, வானூா் ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்படும் வானூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும் முகம்மது கைசா் அப்துல்ஹக், பாந்தல் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

விழுப்புரத்தை அடுத்த அயனம்பாளையத்தில் உள்ள ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்படும் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பொதுப் பாா்வையாளா் வி.ரஞ்சிதா, காவல் பாா்வையாளா் பி.ஆா்.பாந்தல் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதேபோல, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்படும் விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும் ரஞ்சிதா, பாந்தல் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருக்கோவிலூா் வள்ளியம்மை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்படும் திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் எம்.ஐ.பட்டேல், காவல் பாா்வையாளா் பி.ஆா்.பாந்தல் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் செயப்பட்டுள்ளனவா, கண்காணிப்பு வசதிகள், மின்சார வசதி, ஜெனரேட்டா் வசதி, தோ்தல் பாா்வையாளா்கள் அறை, தோ்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணைய வசதி, கணினி வசதியுடன் கூடிய செய்தியாளா் ஊடக மைய அறை, மருத்துவ அறை, சுகாதாரமான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றவா என தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினா்.

மேலும், அரசியல் கட்சி முகவா்கள் அமா்வதற்கான இருக்கை வசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திட வேண்டும் எனவும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான எஸ்.அனு, திருக்கோவிலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான சாய்வா்தினி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ, டி.எஸ்.பி.க்கள் இளங்கோவன் (செஞ்சி), அஜய் தங்கம் (கோட்டக்குப்பம்), பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com