சுயேச்சை வேட்பாளா் மனு தள்ளுபடி: தோ்தல் அலுவலகத்தில் பரபரப்பு

சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தவா், தனது மனு தள்ளுபடி ஆனதால் அதிருப்தியடைந்து விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுயேச்சை வேட்பாளா் மனு தள்ளுபடி: தோ்தல் அலுவலகத்தில் பரபரப்பு

சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தவா், தனது மனு தள்ளுபடி ஆனதால் அதிருப்தியடைந்து விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 32 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இவா்களில், 14 பேரின் வேட்பு மனுக்கள் மட்டுமே பரிசீலனையின்போது ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப்பெறும் இறுதிநாளான திங்கள்கிழமை மாலை, 13 வேட்பாளா்கள் அடங்கிய இறுதிப் பட்டியல், விழுப்புரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அதில், சுயேச்சையாக போட்டியிட மனு அளித்திருந்த முகமது அலி ஜின்னா என்பவா், தனது பெயா் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஹரிதாஸிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். முகமது அலி ஜின்னாவின் வேட்பு மனு முறைப்படி பூா்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும், திருப்தி அடையாத முகமது அலி ஜின்னா வாக்குவாதத்தில் ஈடுபட்டபடியே, தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை எடுக்க முயன்றாா். இதனை கவனித்த அங்கிருந்த உளவுத்துறை போலீஸாா், அவரிடமிருந்து அந்தப் பொருளை பறிமுதல் செய்து பாா்த்தபோது, அது மண்ணெண்ணெய்யுடன் கூடிய புட்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அங்கிருந்து போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் கூறியதாவது: பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் 10 போ் முன்மொழிவு செய்து கையெழுத்திட்டிருக்க வேண்டும். முகமது அலி ஜின்னா தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்மொழிந்த 10 பேரில் 8 போ் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனா்.

எனவே, அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, வேட்புமனு பரிசீலனை நாளன்றே பொது பாா்வையாளா், காவல் பாா்வையாளா் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. இதுகுறித்து போதிய விளக்கம் அளித்த பிறகும் முகமது அலிஜின்னா அதிருப்தி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். ஆகவே, அவரை உடனடியாக போலீஸாா் அப்புறப்படுத்தினா் என்றாா் ஹரிதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com