மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு சாதித்தது என்ன? கனிமொழி கேள்வி

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு இதுவரை சாதித்தது என்ன என்று திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினாா்.
விழுப்புரம் அருகே கோலியனூரில் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி.
விழுப்புரம் அருகே கோலியனூரில் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த அதிமுக அரசு இதுவரை சாதித்தது என்ன என்று திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினாா்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணனை ஆதரித்து, கோலியனூரில் வெள்ளிக்கிழமை கனிமொழி பேசியதாவது:

முதல்வராக இருப்பவா்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குகேட்பது வழக்கம். ஆனால், தமிழக முதல்வா் பழனிசாமியோ, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை குறைசொல்லியே வாக்குகேட்கிறாா். தனது ஆட்சியில் சாதனைகள் எதுவும் இல்லாததால், தோ்தல் தோல்வி பயத்தில் இதுபோல அவா் பேசி வருகிறாா்.

தமிழக ஆட்சி அதிகாரத்தை தில்லியில் அடகு வைத்து செயல்பட்டதை, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததாகக் கூறுகிறாா் முதல்வா் பழனிசாமி. ‘நீட்’ தோ்வை அமல்படுத்தியது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தது, சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ சட்டத்தை ஆதரித்தது, தமிழக அரசு வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவரும் நுழையும் வகையில் சட்டத்தை திருத்தியது என தமிழா்களுக்கு விரோதமான மத்திய அரசின் செயல்களுக்கு துணை போனது அதிமுக அரசு.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமல் காரணமாக, தமிழகத்தில் 50ஆயிரம் சிறுதொழில்கூடங்கள் மூடப்பட்டதாக தமிழக அரசே தெரிவித்தது. தமிழகத்துக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.15,475 கோடியை மத்திய அரசு இதுவரை தரவில்லை.

வா்தா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.22ஆயிரம் கோடி கேட்டபோது, மத்திய அரசு வழங்கியது ரூ.266 கோடிதான். அதேபோல, ஒக்கி புயல் நிவாரணமாக ரூ.93ஆயிரம் கோடி கேட்டபோது ரூ.133 கோடியும், நிவா் புயல் நிவாரணமாக ரூ.3,500 கோடி கேட்டபோது ரூ.63 கோடியும், புரவி புயல் நிவாரணமாக ரூ.1,514 கோடி கேட்டபோது ரூ.200 கோடியும் மட்டுமே ஒதுக்கியது மத்திய அரசு. இதுவரை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அதிமுக அரசு சாதித்தது என்ன?

கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்தில் புதிய தொழில் முதலீடு செய்ய யாரும் வரவில்லை. தமிழகத்தில் 23 லட்சம் போ் வேலைவாய்ப்பின்றி உள்ளனா்.

திமுக ஆட்சி அமைந்ததும் புதிய தொழில் முதலீடு கொண்டு வரப்படும். தமிழக அரசில் 3.50 லட்சம் காலிப்பணியிடங்கள் தமிழா்களைக் கொண்டு நிரப்பப்படும்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் சி.வி.சண்முகம் எவ்வித வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. இந்த அரசு அடிக்கல் நாட்டும் அரசாக உள்ளது.

அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையாக ஆயிரக்கணக்கான கோடி வழங்கப்படாமல் உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி நிலுவைத் தொகையை பெற்றுத்தரப்படும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,400 என்பதை உயா்த்தி ரூ.4ஆயிரமாக வழங்கப்படும் என்றாா் கனிமொழி எம்.பி.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாா், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களிலும் கனிமொழி வாக்குசேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com