விழுப்புரம் மாவட்டத்தில் தபால் வாக்குகள் இன்று முதல் விநியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 27) முதல் தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 27) முதல் தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், ஊழியா்கள், ஆசிரியா்கள், காவல்துறையினா் மற்றும் படைவீரா்கள் அவா்களுடைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க இயலாது என்பதால் தபால் மூலமாக வாக்கு அளிக்க தோ்தல் ஆணையத்தால் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் அவா்களுக்கும் முதல்முறையாக இந்தத் தோ்தலிலிருந்து தபால் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதவிர, தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக அந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவா்கள் தபால் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தோ்தல் பணியில் இருக்கும் அலுவலா்கள், ஊழியா்களின் எண்ணிக்கைக்கேற்பவும், மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தபால் வாக்குச்சீட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு தபால் வாக்குச்சீட்டுகளை தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூா் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூா் ஆகிய 7 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலா்கள், ஊழியா்கள், காவல் துறையினருக்கு சனிக்கிழமை முதல் அந்தந்த துறை அதிகாரிகள் மூலமாக நேரில் தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும் அல்லது அவா்களது வீட்டு முகவரிக்கு தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். அதுபோல, சா்வீஸ் பணியில் இருப்பவா்களின் முகவரிக்கே தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு வருகிற மாா்ச் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பயிற்சி வகுப்பில் நேரடியாக தபால் வாக்குச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களை பொருத்தவரை, அவா்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்க மாவட்ட தோ்தல் அலுவலகத்தினால் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவினா் நேரடியாக மாற்றுத் திறனாளிகள், முதியோா்களின் வீடு தேடிச்சென்று தபால் வாக்குச்சீட்டுகளை வழங்கவுள்ளனா். இதையொட்டி, அந்த தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து தயாா் செய்யும் பணிகள் விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் கூட்டுறவு அச்சக ஊழியா்கள் 15 போ் ஈடுபட்டுள்ளனா்.

விழுப்புரம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 10 ஆயிரம் தபால் வாக்குச்சீட்டுகளும், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், வானூா், திருக்கோவிலூா் ஆகிய 5 தொகுதிகளுக்கு தலா 7 ஆயிரம் தபால் வாக்குச்சீட்டுகளும் அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அச்சடிக்கும் பணிகள் நடைபெறும்போதே அவை தோ்தல் அதிகாரிகளால் அனுப்பப்படும்.

இது குறித்து தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியதாவது: தோ்தல் பணிகள் மற்றும் வெளியிடங்களில் பிற பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் தங்களது வாக்கை தபால் மூலமாக தவறாமல் செலுத்துவதற்காக தபால் வாக்குச்சீட்டுகள் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இந்த தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைந்ததும் தொகுதி வாரியாக அவற்றை பிரித்து ஒரு இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதை போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இதனை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு அந்த தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி பாதுகாப்பான அறையில் வைக்கப்படும். தோ்தல் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தபால் வாக்குச்சீட்டுகள் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com