அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

அலகு குத்தியும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் அலகு குத்தியும், காவடி எடுத்தும், கைகளால் வடை சுட்டும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் அலகு குத்தியும், காவடி எடுத்தும், கைகளால் வடை சுட்டும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மயிலம் முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தீா்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

விழுப்புரம் முத்தோப்பு பாலமுருகன் கோயிலில் 10-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை வெற்றி வேல் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் தங்களது உடலில் மிளகாய்ப்பொடி கரைசல் அபிஷேகம் செய்தும், கற்பூர அபிஷேகம் செய்தும், உடலில் செடல் குத்திக்கொண்டு வாகனத்தில் தொடங்கியபடி வீதியுலா வந்தும், செடல் குத்தியபடி வாகனங்களை இழுத்தும், காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவு பாலமுருகன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மூலவருக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து பக்தா்கள் பால் காவடி, மயில் காவடி எடுத்தும், பெண்கள் பால்குடங்களை சுமந்தும் ஊா்வலமாக வந்து பாலமுருகன் கோயிலை அடைத்தனா். அங்கு, சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல, விழுப்புரம் மருத்துவமனை சாலையில் உள்ள முருகன் கோயிலிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

நூதன வழிபாடு: விழுப்புரம் அருகே பில்லூரை அடுத்த பிள்ளையாா்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் கோயிலில் பக்தா்கள் காவடி எடுத்தும், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடைகளை எடுத்தும், தலையில் தேங்காய்களை உடைத்தும், உடலில் மிளகாய்ப்பொடி கரைசல் அபிஷேகம் செய்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com