திமுக, அதிமுகவுக்கு மாற்று நாம் தமிழா் கட்சி : செஞ்சியில் சீமான் பேச்சு
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழா் கட்சி உள்ளது என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபூ.சுகுமாரை ஆதரித்து செஞ்சியில் சீமான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் தரமான கல்வி கொண்டுவரப்படும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகக் கற்பிக்கப்படும். உயிா் காக்கும் மருத்துவம் தரம் உயா்த்தப்பட்டு ரூ.ஒரு கோடி வரை இலவச மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படும். முதல் குடிமகனுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க சட்டம் இயற்றப்படும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் வருகிறது, ஆனால் மாற்றம் வரவில்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம். எந்த அரசியல், பொருளாதார பின்புலமும் இல்லாமலும், வாக்காளா்களுக்கு பணம் கொடுக்காமலும் தோ்தலைச் சந்திக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்றாா் அவா்.