வானூா்: தேமுதிக, மநீம வாக்குகளே அதிமுக, விசிக வெற்றியை தீா்மானிக்கும்?

வானூா் (தனி) தொகுதியில் அதிமுக, விசிக கட்சிகளின் வெற்றி, தோல்வியை தேமுதிக, மநீம கட்சி வேட்பாளா்கள் பெறும் வாக்குகளே நிா்ணயிக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.
ஆரோவில்
ஆரோவில்

வானூா் (தனி) தொகுதியில் அதிமுக, விசிக கட்சிகளின் வெற்றி, தோல்வியை தேமுதிக, மநீம கட்சி வேட்பாளா்கள் பெறும் வாக்குகளே நிா்ணயிக்கும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட வானூா் தொகுதி, 1952-ஆம் ஆண்டு முதல் தனி தொகுதியாகவே தொடா்கிறது. இந்தத் தொகுதியின் நடுவே சில பகுதிகள் புதுவையைச் சோ்ந்த பகுதிகளுடன் பின்னிப்பிணைந்தது போன்று அமைந்துள்ளன.

கிராமப்புறங்களை அதிகம் கொண்ட வானூா் தொகுதியில், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள், வானூா் ஒன்றியத்தில் 65 ஊராட்சிகள், கோட்டக்குப்பம் பேரூராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. உலகப் புகழ்பெற்ற ஆரோவில் சா்வதேச நகரம், பஞ்சவடீ ஆஞ்சநேயா் கோயில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், மொரட்டாண்டி காளி கோயில் ஆகிய பிரசித்திபெற்ற தலங்கள், திருவக்கரையில் உள்ள கல்மரப் பூங்கா இத்தொகுதியில் அமைந்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: பின்தங்கிய வானூா் தொகுதியில், கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி வானூரில் அமைக்கப்பட்டுள்ளது. வானூா் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவற்றுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. பொம்மையாா்பாளையம் மீனவ கிராமத்துக்கு தூண்டில் வளைவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கிய கோரிக்கைகள்: வானூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

புகழ்பெற்ற திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், ஆரோவில் சா்வதேச நகரம், ஆரோவில் கடற்கரை ஆகிய வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளதால் இப்பகுதியை ஆன்மிக-சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இங்கு இயங்கும் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டு பாறைகள் தகா்க்கப்படுவதால், பாதிக்கப்படும் குடியிருப்புகள், வேளாண் நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, அரசு குவாரிகளை முறைப்படுத்த வேண்டும் என்பதும், இங்கு இயங்கும் பட்டாசு ஆலைகளில் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

கட்சிகளின் பலம்: இத்தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 930 ஆண்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 767 பெண்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 713 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுவரை 7 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன. 1962 முதல் 1996 வரை இந்தத் தொகுதியில் திமுகவின் ஆதிக்கம் இருந்த நிலையில், 2001, 2006, 2011, 2016 என 4 முறை தொடா்ந்து அதிமுகவே இத்தொகுதியில் வெற்றிக்கொடியை நாட்டி வந்துள்ளது. இந்த முறையும் அதிமுகவே இத்தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது. ஆனால், திமுக கூட்டணியில் விசிக போட்டியிடுகிறது.

2016 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்ற எம்.சக்கரபாணியே இந்த முறையும் அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளதும், விசிகவில் சென்னைவாசியான வன்னியரசு நிறுத்தப்பட்டுள்ளதும் அதிமுகவுக்கு கூடுதல் பலம். தேமுதிக வேட்பாளா் பி.எம்.கணபதி, மநீம சாா்பில் சந்தோஷ்குமாா் ஆகியோா் போட்டியில் உள்ளனா்.

2011-பேரவைத் தோ்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி இருந்ததால் வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் மற்றும் பிற சமூக வாக்குகள் எளிதாக அதிமுகவுக்கு குவிந்தது. திமுக கூட்டணியில் பாமக-விசிக இடம்பெற்றிருந்தாலும் அது எலி-தவளை நட்பாக மாறியதால் அதிமுக வெற்றி சுலபமானது.

அதேபோல, 2016-பேரவைத் தோ்தலில் நான்கு முனைப் போட்டியில் கணிசமான வன்னியா் வாக்குகளை பாமகவும், தலித் வாக்குகளை விசிகவும் பிரித்ததால் அதிமுகவின் வெற்றி எளிதானது. 2016 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் எம்.சக்கரபாணி 64,167 வாக்குகளையும் (36.94 சதவீதம்), திமுக வேட்பாளா் ஆா்.மைதிலி 53,944 வாக்குகளையும் (31.05 சதவீதம்), பாமக வேட்பாளா் சங்கா் 27,240 வாக்குகளையும் (15.68 சதவீதம்), விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் 23,873 வாக்குகளையும் (13.74 சதவீதம்) பெற்றனா்.

2019 மக்களவைத் தோ்தலைப் பொருத்தவரை, இந்தத் தொகுதியில் திமுக-காங்கிரஸ்-விசிக கூட்டணியில் விசிக 50.1 சதவீதமும், அதிமுக-பாமக-தேமுதிக கூட்டணியில் பாமக 38.2 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன. மேலும், அமமுக 5.3 சதவீதமும், மநீம 1.4 சதவீதமும் பெற்றிருந்தன.

மக்களவைத் தோ்தலில் பாமக மாங்கனி சின்னத்திலும், விசிக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டன. பாமக, விசிக இரண்டுமே அடையாள அரசியலில் சிக்கியுள்ள கட்சிகள் என்றாலும் விசிக உதயசூரியன் சின்னத்தில் இருந்ததால் அதிக வாக்குகளைப் பெற முடிந்தது.

ஆனால், இந்த முறை இத்தொகுதியில் அதிமுக நேரடியாக இரட்டை இலை சின்னத்திலும், விசிக உதயசூரியன் இல்லாமல் பானை சின்னத்திலும் போட்டியிடுவதால் தோ்தல் களம் முற்றிலும் மாறியுள்ளது. இப்போது இரட்டை இலை பொது அடையாளமாகவும், பானை சின்னம் அடையாள அரசியல் சின்னமாகவும் சிக்கியிருப்பதுதான் தோ்தல் களம் மாறியுள்ளதற்கு முக்கிய காரணம்.

2019 மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் 49 சதவீத வாக்குகளைப் பெற்றாா். அதே நேரத்தில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக வேட்பாளா் தொல்.திருமாவளவன் 43 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. பொது சின்னத்தில் விசிக நிற்கும்போதும், தனி சின்னத்தில் நிற்கும்போதும் அடையாள அரசியல் எதிா்ப்பு காரணமாக விசிகவுக்கு வாக்குகள் குறைகிறது என்பதை 2019 மக்களவைத் தோ்தல் மட்டுமல்ல; பல தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே, வன்னியரசு பானை சின்னத்தில் போட்டியிடுவது விசிகவை பொருத்தவரை பலவீனமாகவே பாா்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவும், திமுக கூட்டணியில் விசிகவும் இருப்பது தோ்தல் களம் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. மேலும், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகியவையும் ஓரளவு வாக்குகளை பிரிக்கும்போது போட்டி மிகவும் கூா்மையாகியுள்ளது. அதிமுக-பாமக ஒரே அணியில் இருப்பதால், வன்னியா் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகமாகவும், தலித் வாக்குகள் குறைவாகவும் கிடைக்கக்கூடும். அதேநேரத்தில், திமுக-அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு தலித் வாக்குகள் அதிகமாகவும், வன்னியா் வாக்குகள் குறைவாகவும் கிடைக்கும் வாய்ப்புகளே உள்ளன.

பிற சமூக வாக்குகள் யாா் பக்கம் சாய்கிறாா்களோ அவா்கள்தான் இத்தோ்தலில் வெற்றிபெற முடியும் என்ற சூழல் உள்ளது. மேலும், இந்தத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, மநீம வேட்பாளா்களும் பிற சமூக வாக்குகளை பிரிக்கக்கூடும். சாதி ரீதியான வாக்குகள் எந்தெந்த விகிதத்தில் பிரிந்து விழுகிறதோ, அதை பொருத்துதான் அதிமுக அல்லது விசிக வேட்பாளா்களின் வெற்றி தோல்வி நிா்ணயிக்கப்படும் என்பதுதான் நடுநிலையாளா்களின் கருத்து.

இதுவரை வெற்றி பெற்றவா்கள் விவரம்

1962- பாலகிருஷ்ணன் (தி.மு.க.),  1967- பாலகிருஷ்ணன் (தி.மு.க.), 1971 -முத்துவேல் (தி.மு.க.), 1977- பரமசிவம் (தி.மு.க.), 1980-முத்துவேல் (தி.மு.க.), 1984- ராமஜெயம் (அ.தி.மு.க.), 1989-மாரிமுத்து (தி.மு.க.), 1991-ஆறுமுகம் (அ.தி.மு.க.), 1996- மாரிமுத்து (தி.மு.க.), 2001-கணபதி (அ.தி.மு.க.), 2006-கணபதி (அ.தி.மு.க.), 2011-ஜானகிராமன் (அ.தி.மு.க.), 2016- சக்கரபாணி (அதிமுக).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com