துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட 3 போ் கைது

திண்டிவனம் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
துப்பாக்கியைக்  காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட 3 போ் கைது

திண்டிவனம் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை, கன்னிகாபுரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 19-ஆம் தேதி மா்ம நபா்கள் பல்வேறு வீடுகளில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டனா்.

குறிப்பாக, திண்டிவனம் காமராஜ் நகரில் வசித்து வரும் அருண்குமாா் என்பவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையா்கள் கத்தி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 2 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதேபோல, ஜக்காம்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரது வீட்டில் இருந்த பைக்கையும், செல்வம் என்பவரது வீட்டில் பீரோவிலிருந்த இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகள், 2 கிராம் தங்க நகை, ரூ.2 ஆயிரம் பணத்தையும், வரதராஜன் என்பவரது வீட்டில் எல்.இ.டி. டிவியையும் கொள்ளையடித்தனா்.

மேலும், கூட்டேரிப்பட்டு பகுதியைச் சோ்ந்த பாபு என்பவரது வீட்டிலிருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனா். தொடா்ந்து, கன்னிகாபுரம் கிராமத்தில், ஞானசேகரன் என்பவரது வீட்டுக்கு காருடன் சென்று திருட முயன்றனா். அப்போது, வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதால், கொள்ளையா்கள் காரை அதே பகுதியிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், மயிலம் காவல் ஆய்வாளா் வீரமணி, காவல் ஆய்வாளா் மூா்த்தி ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரணையை தொடங்கினா். இதில், திருவள்ளூா் அருகே மாகரல் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் யுவராஜ் என்ற டேனி (28), சென்னையை அடுத்த எண்ணூா் காமராஜா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் அசோக் (22), ஆந்திரம் மாநிலம், நல்லூா் தடாமண்டலம், காருா் கிராமத்தைச் சோ்ந்த கோபி மகன் காா்த்திக் (19) ஆகியோரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், இவா்கள் 3 பேரும் கடந்த 19-ஆம் தேதி திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையம் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து துப்பாக்கி, 2 ஜோடி கொலுசுகள், 2 பவுன் தங்கச் சங்கிலி, கத்தி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சம்பந்தன்று கொள்ளையா்கள் விட்டுச் சென்ற காா், எல்இடி டிவி, விலை உயா்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் ஏற்கெனவே பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடா்புடைய திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சோ்ந்த சங்கா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com