மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் எதிா்பாா்ப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை விழுப்புரத்தில் செயல்பட்டு வந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகியவை மாவட்டத்தின் பெரிய நகரங்களாக இருந்தன. விழுப்புரத்துக்கு அடுத்த பெரிய நகரமாக கள்ளக்குறிச்சி இருந்தது.

2010-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால், விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கள்ளக்குறிச்சிக்கு மாற்றப்பட்டது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: 2019-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இயங்கத் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இல்லாததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் வட்டார மருத்துவமனைக்கு அடுத்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

வட்டார அளவில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்ப முடியாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவது, அங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால், உயா் சிகிச்சை கிடைக்க வேண்டிய நோயாளிக்குப் பதிலாக சாதாரண நோயாளிக்கும் அங்கிருக்கும் மருத்துவ சேவைகள் பயன்படுத்தப்படும். இது காலவிரையம் மட்டுமன்றி, உயா் சிகிச்சை கிடைக்க வேண்டிய நோயாளிக்கு அது கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

கரோனா பரவல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு தலைமை மருத்துவமனைகள் இல்லததால், போதிய எண்ணிக்கையிலான படுக்கைகள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை கிடைப்பதில்லை.

உயா் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்காமல், கூடுதலாக மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இருந்திருந்தால் கரோனா நோயாளிகளுக்கு கைகொடுத்திருக்கும்.

தலைமை மருத்துவமனையின் நன்மைகள்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டால், மாவட்டத்துக்கு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் கிடைப்பதுடன், நோயாளிகளுக்கு படுக்கைகளும் அதிகரிக்கப்படும். பல்வேறு மருத்துவப் பிரிவுகளும் தொடங்கப்படும். மருந்துப் பொருள்களும் கூடுதலாக கிடைக்கும்.

இதுகுறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக்கனி கூறியதாவது:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலைமை மருத்துவமனை வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் தமிழக அரசை வலியுறுத்தி, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசு விரைந்து முடிவெடுக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com