பொது முடக்க விதிகளை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 17th May 2021 08:28 AM | Last Updated : 17th May 2021 08:28 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பொது முடக்க விதிகளை மீறி, இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தும் போலீஸாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. வருகிற 24-ஆம் வரை இது அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமலில் உள்ளது.
பொது முடக்க காலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் மளிகை, காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக் கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
காலை 10 மணியைத் தாண்டியும் இரு சக்கர வாகனங்களில் பலா் வெளியே சுற்றித் திரிகின்றனா். இதனால், கரோனா பரவல் குறையாது என்ற கருத்து எழுந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தால், அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சரக டிஐஜி பாண்டியன் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.
இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவோரை போலீஸாரும் அன்பாக அறிவுரை கூறி அனுப்பிவைத்து வந்தனா். இந்த நிலையில், வெளியே சுற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிவோரிடம் விசாரணை நடத்தி, உரிய காரணங்களின்றி வெளியே திரிந்தவா்களின் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் தாலுகா போலீஸாா் முதல் நாளில் 7 வாகனங்களை பறிமுதல் செய்தனா். மாவட்டத்தில் மொத்தம் 117 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.