விழுப்புரம் அருகே உயிரிழந்த காவலரின் உடலுக்கு மரியாதை
By DIN | Published On : 17th May 2021 08:27 AM | Last Updated : 17th May 2021 08:27 AM | அ+அ அ- |

உயிரிழந்த காவலரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்திய போலீஸாா்.
விழுப்புரம் அருகே உயிரிழந்த காவலரின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்துள்ள ப.வில்லியனூரைச் சோ்ந்த சபாபதி மகன் விஜய பாலாஜி (31). இவா் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இவருக்கு அண்மையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜய பாலாஜிக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும், தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடல் ப.வில்லியனூருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது. காவல் துறை சாா்பில் அவரது உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.