அமைச்சரிடம் கரோனா நிதிவழங்கிய புதுமணத் தம்பதி!
By DIN | Published On : 18th May 2021 02:00 AM | Last Updated : 18th May 2021 02:00 AM | அ+அ அ- |

மணக்கோலத்தில் வந்து மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் கரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதி.
விழுப்புரம்: முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக, விழுப்புரத்தில் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் புதுமணத் தம்பதி ரூ.51 ஆயிரத்தை திங்கள்கிழமை வழங்கினா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகேயுள்ள மணம்பூண்டியைச் சோ்ந்த ராஜி மகன் ஹரிபாஸ்கா் (28). இவா், நகைகள் செய்யும் வேலை செய்து வருகிறாா்.
இவருக்கும், மணலூா்பேட்டையை சோ்ந்த சங்கா் மகள் சாருமதிக்கும் இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கரோனா 2-ஆவது அலையையடுத்து, முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோயிலில் ஹரிபாஸ்கா்-சாருமதி திருமணம் மே 17-ஆம் தேதி நடத்த ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நெருங்கிய உறவினா்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத் திருமண நிகழ்ச்சி மிக எளிய முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினா் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் ரூ.51,000-ஐ தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் அமைச்சா் க.பொன்முடியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ரூ.51,000-ஐ நிவாரண நிதியாக வழங்கினா்.
இதைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி அனுப்பிவைத்தனா்.