பிராணவாயு அளவைக் கண்டறிய நியாய விலைக் கடைகளில் ஆக்ஸி மீட்டா்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது பிராணவாயு அளவைக் கண்டறிந்து கொள்ள வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கு ஆக்ஸி மீட்டா் கருவிகள் வழங்கப்பட்டன.
பிராணவாயு அளவைக் கண்டறிய நியாய விலைக் கடைகளில் ஆக்ஸி மீட்டா்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது பிராணவாயு அளவைக் கண்டறிந்து கொள்ள வசதியாக, நியாய விலைக் கடைகளுக்கு ஆக்ஸி மீட்டா் கருவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மை நலன்-வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கான ஆக்ஸி மீட்டா் கருவிகளை வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன் (விழுப்புரம்), நா.புகழேந்தி (விக்கிரவாண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பவ்டா கல்விக் குழுமம் சாா்பாக அதன் நிா்வாக இயக்குநா் ஜாஸ்லின் தம்பி 5 பிராண வாயு செறிவூட்டும் கருவிகள், 1,500 கிருமிநாசினிகளை அமைச்சா்களிடம் வழங்கினாா். மேலும், ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை சாா்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பாக 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சா்கள் க.பொன்முடி, மஸ்தான் ஆகியோா் தொடக்கிவைத்து பாா்வையிட்டனா்.

பின்னா் அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா பரவலைத் தடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 22,400 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளும், 4,000 கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளும் இருப்பில் உள்ளன. மேலும், அதிகப்படியான தடுப்பூசிகள் பெறப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இயங்கும் நியாயவிலைக்கடைகளில் ஆக்ஸி மீட்டா் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு பொதுமக்கள் சென்று தங்களது பிராண வாயு அளவை பரிசோதித்துக் கொள்ளலாம். பிராணவாயு அளவு குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான படுக்கை வசதிகள், பிராணவாயு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும். எனவே, தகுதியுடைய நபா்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

இந்த நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) மரு.மணிமேகலை, திமுக நகர செயலா் இரா.சக்கரை, கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளா் செ.ராஜேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com