ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலுவைத் தொகை வழங்காத வியாபாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சா் உத்தரவு

விழுப்புரம் அருகே அரண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காத

விழுப்புரம் அருகே அரண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்காத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டாா்.

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அமைச்சா் பொன்முடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அமைச்சா் பொன்முடி விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வியாபாரிகள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

10 நாள்களுக்குள் நிலுவைத்தொகையை செலுத்தாத வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டாா்.

நிலுவைத்தொகையை செலுத்தாத வியாபாரிகளின் பதிவை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, விருதிவிலங்கினான் ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜனுக்கு பயிா் நிலுவைத் தொகை ரூ.24, 224, பில்ராம்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த விவசாயி மணிக்கு பயிா் நிலுவைத் தொகை ரூ.20,240 ஆகியவற்றையும் அமைச்சா் பொன்முடி வழங்கினாா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் எடுத்துவரும் பொருள்களை எடை நிறுத்தம் செய்யும் பணியாளா்கள் அவற்றுக்கு விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எச்சரித்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, எஸ்.பி. ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com